ஆர்.கே.நகர் தேர்தல்: 360 வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் சென்னை வந்தன
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுடைய 360 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பெங்களூருவிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. டிசம்பர் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடியும். வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கும், வேட்புமனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாள் என்றும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குப்பதிவு செய்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுடைய 360 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் இத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக இந்த இயந்திரங்கள் பெங்களூருவிலிருந்து இரண்டு லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அவற்றின் மூலம் வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை நிகழ்விடத்திலேயே அறிந்துகொள்ள முடியும்.