ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் மருதுகணேஷ்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள உதவும் முக்கியான வாய்ப்பு இந்த இடைத்தேர்தல் என்பதால், தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் ஆர்வத்துடன் களமிறங்கி உள்ளன.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் இன்று அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் ஏற்கனவே திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான மருதுகணேஷ் ஆர்.கே.நகர் பகுதி செயலாளராக இருக்கிறார்.