‘அனைவரது ஆதரவுக்கும் நன்றி’ - ஆர்.ஜே பாலாஜி.. இன்று இரவு அறிவிப்பு..!

‘அனைவரது ஆதரவுக்கும் நன்றி’ - ஆர்.ஜே பாலாஜி.. இன்று இரவு அறிவிப்பு..!
‘அனைவரது ஆதரவுக்கும் நன்றி’ - ஆர்.ஜே பாலாஜி.. இன்று இரவு அறிவிப்பு..!

ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களம் காணப்போகிறார் என்ற தகவல்கள் வாட்ஸ்-அப்பில் பரவி வந்த நிலையில், தனது அடுத்தக்கட்ட
பயணம் இன்று 7 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். 

மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த தினத்தன்று ஆர்.ஜெ.பாலாஜியின் அரசியல்
அறிவிப்புக்காக காத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சிலர் சுவர் ஓவியங்களை வரைந்திருந்தனர். அதில் ‘இளைஞர்களை வழிநடத்த,
தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜெ.பாலாஜி அவர்களை வரவேற்கிறோம்’ என எழுதப்பட்டுப்பட்டிருந்தது. இந்த
புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கப்போகிறார் என்ற தகவலும் பரவியது. ஆனால்
அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் வதந்தி என ஆர்.ஜே.பாலாஜி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது இளைஞர்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். அப்போது
விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் குழுவாக சேர்ந்து மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். அதேபோல நடிகர்
ஆர்.ஜே.பாலாஜியும் பல உதவிகளை செய்தார். இதனால் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை
உலகமே அறியும். இந்த போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரான்ஸ் உள்ளிட்ட பலர் ஆதரவளித்தனர். அந்த வகையில்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி மெரினா போராட்டக்களத்தில் பங்கேற்றனர். அப்போது
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மத்தியில் பேசிய பாலாஜி, ‘அனைத்து பிரச்னைக்கும் இதேபோன்ற ஒருமித்த குரலுடன்
இணைந்து போராட வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார்.

அண்மையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது சென்னையில்
ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என சில அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அன்றைய தினம் சென்னை
அணி விளையாடும் போட்டியை, தொலைக்காட்சியில் தொகுத்து வழங்க முடியாது என பாலாஜி குரல் கொடுத்தார். இவ்வாறு
தொடர்ந்து பல சமூகப் பிரச்னைகளுக்கு அவர் குரல் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில்தான் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் வருகை என சுவர் ஓவியங்கள் பரவின. அந்த சுவர் ஓவியத்தில் சிவப்பு, கருப்பு,
பச்சை நிறத்தில் ஆன கொடியும், அதைசுற்றி மஞ்சள் நிறமும் நிரப்பட்டிருந்தது. கொடியின் மையத்தில் காளை மாட்டின் படம்
இடம்பெற்றிருந்தது. அத்துடன் மே 18ஆம் தேதி அறிவிப்பிற்கு காத்திருக்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த தகவல்கள் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி இந்த கொடியின் படத்தை ட்விட்டர் முகப்பாக ஆர்.ஜே
பாலாஜி வைத்திருந்தார். 

இந்த சூழலில் ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று இரவு 7 மணிக்கு தனது அடுத்தகட்ட பயணம் தொடர்பாக கிரிக்கெட் 
வீரர்கள் அறிவிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

இது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com