கனமழை காரணமாக தரைப்பாலம் மூழ்கும் அபாயம் : 3 கிராம மக்கள் அவதி
நிவர் புயல் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓங்கூர் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஆற்றை கடந்து செல்லக்கூடிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டகப்பட்டு கிராமம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த புதுப்பேட்டை, அகரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கினால் சுமார் 150 குடும்பங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
2 மாவட்ட நிர்வாகங்களும் உடனடியாக இந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.