"பிரிந்து இருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடிபிடிக்க ஆரம்பித்துவிட்டது. தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை, பாஜக அண்ணாமலையின் டெல்லி பயணம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைப்பெற்றது. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை காரணமாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி,டி,வி தினகரன், செங்கோட்டையன் என பலர் பிரிந்து, வெளியே வந்துவிட்டனர், வெளியேற்றவும்பட்டனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பிய செங்கோட்டையன் தவெக-வில் இணைந்து விட, பலரும் ஒன்றிணைப்பு கோரிக்கை கூறி எடப்பாடி பழனிச்சாமி வழிக்கு வராததால் தனிக்கட்சி நிலைப்பாட்டிற்கு நகர்ந்து விட்டனர்.
தொடர் தோல்விகள், வாக்குஇழப்பு என அதிமுக சரிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவுகள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பப்படும் என அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறின .
ஆனால், இந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக - பாஜாக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமிக்கு அளிப்பது, வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை .
இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் கோரிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக போடியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என விரும்பும் அனைவரும், பிரிந்து இருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புவதாக பேசியிருக்கிறார்.
ராஜ்குமார் . ர
