”பயணத்தின் போது இதெல்லாம் நடக்கும்.. அதனால்..” - நெகிழவைத்த கண்டக்டரின் பேச்சு! வீடியோ

”பயணத்தின் போது இதெல்லாம் நடக்கும்.. அதனால்..” - நெகிழவைத்த கண்டக்டரின் பேச்சு! வீடியோ
”பயணத்தின் போது இதெல்லாம் நடக்கும்.. அதனால்..” - நெகிழவைத்த கண்டக்டரின் பேச்சு! வீடியோ
Published on

அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன கட்டண விவரங்கள் என்ன என்பதை நடத்துநர் ஒருவர் விரிவாக விளக்கும் வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அந்த வீடியோவில் மதுரையில் இருந்து கோவை செல்லும் தமிழ்நாடு அரசுப் பேருந்தின் நடத்துநரான சிவசண்முகம் என்பவர் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை கூறியும், பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தவும் செய்திருக்கிறார்.

அதில், “அரசுப் போக்குவரத்து சேவையை தேர்வு செய்து எங்களோடு பயணிக்க வாய்ப்பளித்ததற்கும் மிக்க நன்றி. நல்ல பேருந்து வசதியை அரசு நமக்கெல்லாம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. அந்த பேருந்தை சுத்தமாகவும், பழுது ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கண்டக்டர் இப்படியெல்லாம் சொல்கிறாரே என வருத்தம் கொள்ளவேண்டாம். சாப்பிட்ட பிறகு தூக்கி எறியும் கழிவு பொருட்களை போடுவதற்கென பேருந்தின் இரு பக்கத்திலும் பைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் போடுங்கள். மேலும் பயணங்களின் போது சிலருக்கு குமட்டல், வயிறு பிரட்டுவது போன்ற அசவுகரியமான தொந்தரவுகள் வரும்.

அப்படி ஏதும் வந்தால் உடனே சொல்லுங்கள் புளிப்பு மிட்டாய், கவர்களெல்லாம் இருக்கின்றன. வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் இது நமது பேருந்து நாமதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். யாரும் சங்கடப்பட்டுக்கொள்ள வேண்டாம். பேருந்து வாடிப்பட்டி வழியாகத்தான் செல்லும். முடிந்தளவுக்கு சில்லறையாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி, கல்லூரி, விசேஷங்கள், வேலை நிமித்தம் என பலதரப்பட்ட மக்கள் இந்த பேருந்தில் பயணிப்பதுண்டு. உங்கள் பயணம் இனிதாகவும், வெற்றிகரமாகவும் அமைய அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பாகவும், இந்த பேருந்தின் ஓட்டுநர் மகேந்திரன் மற்றும் நடத்துநரான என் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.” என கனிவாக பேசியிருக்கிறார் அந்த நடத்துநர். 

ஏற்கெனவே இதே நடத்துநர்தான் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பேருந்தில் வரும் பயணிகளுக்கென கிருமி நாசினி, முகக்கவசங்களை கொடுத்து நன்மதிப்பை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com