திருவள்ளூர் மாவட்டத்தில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ரயில்வே தானியங்கி கேட் அருகில் இருந்து சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து, ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் பாரதி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் இன்று காலை, மேட்டுத் தெரு மற்றும் தானியங்கி ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த, முட்புதரில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, 500 கிலோ இருந்தது. தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளை திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.