திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்... மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஈரோடு செங்கோடம்பள்ளத்தில், மதிமுகவின் 31ஆவது பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும், வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும், தமிழ்நாட்டில் பாஜகவின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் பேசியிருந்தார். அவர் கூறியிருந்ததாவது, “வரும் தேர்தலில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் எண்ணிக்கை கேட்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியின் பொது நோக்கத்திற்கு எந்த பாதகமும் வந்து விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுப்போம். எங்களின் ஆசைகளை கருத்துகளை பொதுக்குழுவில் கூறுவோம்” எனப் பேசியிருந்தார். இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 28 தீர்மானங்களில் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்பதும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.