மணல் குவாரிக்கு எதிர்ப்பு: விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கீழஅன்பில் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க 50க்கும் அதிகமான கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இரவோடு இரவாக மணல் குவாரி அமையவுள்ள இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டது. அதனால், ஆத்திரமடைந்த கீழஅன்பில், செங்கரையூர், சாந்தபுரம், நத்தம், கொப்பவள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு மணல் குவாரி குறித்து விளக்கமளித்தார். அதனை ஏற்காத மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு, அங்கு போடப்பட்டிருந்த கொட்டகையை பிரித்தெரிந்தனர்.
மணல் குவாரி வந்தால், 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மக்களின் போராட்டத்தால் கீழஅன்பில் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.