விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு; மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு

விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு; மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு

விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு; மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு
Published on

ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்க மறுத்து போராடும் விவசாயிகள் மீது ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தை ஒட்டியுள்ள காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய கிராமங்களில் இருந்து 570 ஏக்கர் விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்களை ஒருபோதும் விட்டுகொடுக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளனர். 

இதனிடையே நான்கு கிராம விவசாயிகளும் இணைந்து விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு இயக்கம் ஒன்றை துவங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தும்பிபாடி கிராம நிர்வாக அலுவலர் மாரி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திலும், காமலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி அறிவழகன் ஓமலூர் காவல் நிலையத்திலும் விவசாயிகள் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் நிலம் அளவை செய்ய சென்ற எங்களை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆவணங்களை பிடுங்கி கொண்டதாகவும், தெரிவித்துள்ளனர்.

மேலும் தும்பிபாடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் விவசாயிகள் கூட்டம் போட்டு, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும், நிலங்களை கொடுக்க விடக்கூடாது என்று பேசினர். அப்போது அரசுக்கு எதிராக பேசாதீர்கள் என்றும் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் முறைப்படி தான் செய்ய வேண்டும், கலைந்து செல்லுங்கள் என்று நாங்கள் கூறினோம். அப்போது அங்கிருந்த சிக்கனம்பட்டி ஜெகதீசன், பாரதி, காமலாபுரம் சுகுமார், முருகன், தும்பிபாடி ரவி, சின்னபையன், சட்டூர் வினோத்குமார், காமலாபுரத்தை சேர்ந்த முருகன், மாரியப்பன் மகன் முருகன், முத்துகுமார், மோகன்ராஜ், பழனிசாமி ஆகியோர் தங்களை மிரட்டியதாகவும், எங்கள் அனுமதி இல்லாமல் நிலத்தை அளந்தால் யாரும் உயிருடன் போக மாட்டீர்கள் என்றும் மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் ஓமலூர், மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விவசாயிகள் மீதான வழக்குப்பதிவு மிகவும் கண்டிக்கத்தக்கது, தங்களது நிலத்தை காக்க போராடுபவர்களை அரசே காவல்துறையினரை வைத்து அச்சுறுத்துவது வேதனையான செயலாகும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com