உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடுகோரி உயர்நீதிமன்றத்தில் மனு

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடுகோரி உயர்நீதிமன்றத்தில் மனு
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடுகோரி உயர்நீதிமன்றத்தில் மனு

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகமாக தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ செ.கு.தமிழரசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகள் என 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன. இக்குழுக்களில் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பெண்களுக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, உள்ளாட்சி அமைப்புக்களான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டம் கொண்டு வரலாம் என 2012-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com