எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கஜா புயல் சீரமைப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவியும் வழங்கினார். பின் “ஜீ பூம்பா என்று சொன்னவுடன் மின்கம்பங்களை நட்டுவிட முடியாது. புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதால் கணக்கிடும் பணி, நிவாரணப் பணி முடியவில்லை. புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமாக உள்ளது. சீரமைப்பு பணிகள் தீவரமாக நடைப்ற்று வருகிறது என்றார். மேலும் கஜா புயல் சீரமைப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.