காலை இழந்து கஷ்டத்தில் வாழும் சுற்றுலா வழிகாட்டி... பயோனிக் கால்கள் வழங்க கோரிக்கை

காலை இழந்து கஷ்டத்தில் வாழும் சுற்றுலா வழிகாட்டி... பயோனிக் கால்கள் வழங்க கோரிக்கை
காலை இழந்து கஷ்டத்தில் வாழும் சுற்றுலா வழிகாட்டி... பயோனிக் கால்கள் வழங்க கோரிக்கை

கொடைக்கானலில் ஒருகால் மற்றும் மறுகாலில் உள்ள விரல்களை இழந்தும், இன்னும் நம்பிக்கை இழக்காமல் உழைக்கத் துடிக்கும் குடும்பத் தலைவன்.. பயோனிக் கால்கள் இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசிப்பவர் ஜெரால்டு. ஐந்து மொழிகளுக்கு மேல் பேசக்கூடிய திறமை வாய்ந்த சுற்றுலா வழிகாட்டியான இவருக்கு, சர்க்கரை நோய் இருந்த நிலையில் திடீரென்று உடலில் ஏற்பட்ட அதீத சர்க்கரை அளவால் ஒருகால் முழுவதும் அகற்றப்பட்டு, மறுகாலில் இருந்த கட்டை விரலும் நீக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

திருமணமான அவருடைய ஒரே மகனும் மனைவியுடன் எற்பட்ட மனக்கசப்பில் மனைவியை பிரிந்து மன நலம் குன்றிய நிலையில் தன்னுடைய குழந்தையை தந்தையிடம் கொடுத்துவிட்டு வேறு மாநிலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகனுக்கு பிறந்த ஒரு ஆண் பிள்ளையையும், மூன்று வயதில் இருந்து தான் வளர்த்து வருகிறார். 

இருதய கோளாருடன் அவதிப்படும் தனது மனைவி, தற்பொழுது சமையல் வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வருவதாக கண்ணீருடன் கரகரத்த குரலில் கூறுகிறார். தனது சர்க்கரை நோய்க்காக பல ஆயிரம் ரூபாய் மாதாந்திர மருந்து செலவு, வீட்டுச் செலவு மற்றும் மனைவியின் மருத்துவ செலவு, என அனைத்தையும் தனது மனைவி கடினமாக உழைப்பால் நிறைவேற்றுவதாக கூறுகிறார்.

'எனது மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தானும் உழைக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறேன். ஆனால் கட்டைக்கால்களை கொண்டு வேலைக்கு செல்ல முடியவில்லை' என்று கூறும் அவர், ஐந்து வருடங்களாக முடங்கினாலும், மனதளவில் சோர்வடையவில்லை என்று நம்பிக்கையுடன் உள்ளார். 


அதனால் அரசும் தொண்டு அமைப்புகளும் சேர்ந்து, தனக்கு பயோனிக் கால்கள் கிடைக்க உதவினால், தன்னால் மீண்டும் பணிக்கு செல்ல முடியும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது மாதாந்திர மருத்துவ செலவு, மனைவியின் மருத்துவ செலவு மற்றும் பேரனின் படிப்பு செலவையும் பார்த்து கொள்ள முடியும் என்றார்.

"மாற்றுத் திறனாளியான எனக்கு அரசு மற்றும் தொண்டு அமைப்புகள் முன்வந்து, பயோனிக் கால்கள் கிடைக்க பேருதவி செய்ய வேண்டும்" என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். இவரது தற்போதைய நிலை குறித்தும், அவரது நிலையை மாற்ற தேவைப்படும் பயோனிக் கால்கள் குறித்தும் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, ஜெரால்டின் தேவையை பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com