கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு; தர்ணா போராட்டம்
கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை அதிமுக-வினர் உடைப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள விடுதி அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிமுக-வினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து வைத்துள்ளதாவும், கேமரா உட்ளிட்ட உபகரணங்களை உடைப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.