வசந்தி தேவி
வசந்தி தேவிpt web

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி To சிறந்த கல்வியாளர் | காலமானார் வசந்திதேவி.. யார் இவர்?

பிரபல கல்வியாளரும் சமூக ஆர்வலருமான வசந்திதேவி காலமானார். அவருக்கு வயது 87.
Published on

முன்னாள் துணை வேந்தரும் கல்வியாளருமான முனைவர் வசந்தி தேவி (Vasanthi Devi)  1938-2025 காலமானார். அவருக்கு வயது 87 தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளராக, பெண்ணியவாதியாக, சமூக ஆர்வலராக திகழ்ந்த வசந்தி தேவி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாரடைப்பால்  காலமானார் .

வசந்தி தேவி ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்; 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பொறுப்பு வகித்தார்.

1992-1998 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இந்திய வளர்ச்சிக்கான சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

வசந்தி தேவி பெண்கள்,  குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தம் என்கிற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1973 ஆம் ஆண்டு பதம் விபூஷன் விருது பெற்றவர். வசந்தி தேவிக்கு 2017 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருது வழங்கப்பட்டது.  

எம்பி ரவிக்குமார் அஞ்சலி

எம்பி ரவிக்குமார் வசந்திதேவிக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “கல்வியாளராகவும் பொதுநிலை அறிவுஜீவியாகவும் திகழ்ந்த பேராசிரியர் வே.வசந்திதேவி அவர்கள் மறைவெய்திய செய்தி ஆற்றொணாத் துயரத்தைத் தருகிறது. கல்வி தொடர்பாக நான் முன்னெடுத்த அனைத்துப் பணிகளிலும் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்தவர். 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் செல்வி ஜெயலலிதா அவர்களை எதிர்த்துப் போட்டியிட எவரும் முன்வராத நிலையில் நானும், தலைவர் திருமாவளவன் அவர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விசிக வேட்பாளராகப் போட்டியிட்டார். அதிகாரத்தை எதிர்த்துப் போராடத் தயங்காதவர். அவருக்கு என் அஞ்சலி” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்

அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருக்கும் பதிவில், “மிகச்சிறந்த கல்வியாளர் தோழர் வசந்திதேவி அவர்களின் மறைவை பெரும் இழப்பாக கருதுகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எனக்கான தோழர்களில் ஒருவராக இருந்து வழிகாட்டியவர் திருமிகு.வசந்திதேவி அவர்கள். கல்வி பற்றி அவர் எழுதிய நூல்கள் பரந்துபட்ட பார்வையை எனக்கு வழங்கியது. வயது மூப்பின் தள்ளாமையிலும் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு தீர்க்கமான குரலில் மென்மையாய்த் தமது ஆலோசனைகளை வழங்கியவர். அதே நேரத்தில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வந்தவர். அவரின் இழப்பு கல்விச் சிந்தனையாளர்களுக்குப் பேரிழப்பாகும். செவ்வணக்கம் தோழர்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com