கடலில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரம்
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் 7-ஆவது நாளாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 27-ஆம் தேதி இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் அதிக அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்பகுதி முழுவதும் அடர்த்தியாக பரவியிருக்கும் எண்ணெய் படலத்தை, அகற்றும் பணியில் 7-ஆவது நாளாக 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன உறுஞ்சும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் படலத்தை அகற்ற இயலாததால் கைகளால், வாளிகள் கொண்டு எண்ணெய் கசிவுகள் அகற்றப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் படலத்தால், கடற்கரை பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களான, ஆமைகள், மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேப்போல், மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளில் எண்ணெய்ப் படிந்துள்ளதால் மீன்பிடித்தொழில் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளதாக மீனவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டதற்கு எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், கூடுதல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.