அண்ணாமலை வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்-வாக்குவாதம்.. கைது .. பனையூரில் பரபரப்பு
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு வெளியே 100 அடி உயரம் கொண்ட கட்சி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று கொடிக் கம்பத்தை அகற்ற ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்தனர்.

இதனையறிந்த அண்ணாமலையின் வீட்டின் முன்பு குவிந்த பாஜகவினர் ஜேசிபி இயந்திரத்தை சேதப்படுத்தினர். இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலை வீட்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை காவல் துறையினர் அகற்றினர். இந்நிலையில், பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிரேன் வாகன கண்ணாடியை உடைத்ததாக பாஜகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.