நாகை: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளி உயிரிழப்பு?
நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மைநிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட எஸ்தர் ராணி என்பவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட உறவினர்கள் செவிலியர்களிடம் தகவல் அளித்தனர். செவிலியர்கள் பரிசோதனை செய்ததில் எஸ்தர் ராணி உயிரிழந்தது தெரியவந்தது.
அருகில் மற்ற படுக்கைகளில் இருந்த நோயாளிகளும் மூச்சு திணறலால் அவதியடைந்ததை கண்ட உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்சிஜன் பற்றாக்குறையாலேயே எஸ்தர் ராணி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயரிடம் கேட்டதற்கு உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.