பெண் உயிரிழப்பு: செவிலியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியல்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த சிலமணி நேரத்தில் இளம் பெண் உயிரிழந்த விவாகாரத்தில் செவிலியர்களின் அலட்சியமே காரணம் என கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் கார் மெக்கானிக் பிரேம்குமார் (30). இவரது மனைவி சுபா (28). இவர் லேப் டெக்னீசியன் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கர்ப்பமாக இருந்த சுபா கடந்த 25ஆம் தேதி முதல் பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று சுபாவிற்கு அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் இரவில் தீடீரென சுபாவிற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. 2மணி நேரத்தில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். சுபாவிற்கு வலிப்பு ஏற்பட்டபோது பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை என்றும், மேலும் இது குறித்து செவிலியர்களிடம் கூறியபோது அலட்சியமாக செயல்பட்ட காரணத்தால் சுபா உயிரிழந்துவிட்டதாக கூறி சுபாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுக்கையிட்டனர்.
இதையெடுத்து கிழக்கு காவல்நிலைய போலீசார் சுபாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சுபாவின் உடல் உடற்கூராய்வுக்காக இரவோடு இரவாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சுபாவின் உறவினர்கள் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுபாவின் உடலை உடற்கூராய்வுக்காக இரவோடு இரவாக நெல்லைக்கு கொண்டு சென்றதை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்.செ.ராஜூ, கோட்டாட்சியர் சங்கரநாரயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி டி.எஸ்.பி (பொறுப்பு) முருகவேலு மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.