'ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம்' - ஜெயக்குமார் கிண்டல்

'ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம்' - ஜெயக்குமார் கிண்டல்
'ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம்' - ஜெயக்குமார் கிண்டல்

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி எனவும் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என தனி கட்சியை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி நடத்தலாம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.  

சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''ஓபிஎஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டம் கம்பெனி கூட்டம். விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் அவர் என்பதை, அவர் ஒருமையில் பேசியதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு, அமைச்சர் பதவி கிடைப்பதை யாரும் தடுக்கவில்லை. அவர் தான் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்” என குற்றம்சாட்டினார்.

மேலும் பேசுகையில், “பொதுக்குழுவில் நீக்கப்பட்ட ஒருத்தர், எப்படி கட்சிக்கு சம்பந்தப்பட்டவராக இருக்க முடியும்? வேண்டுமானால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அவர் தனி கட்சியை தொடங்கி நடத்திக் கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதை அதிமுக தான் முடிவு செய்யும்” என்றார்.

தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசுகையில், “நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. அதனை திசை திருப்புவதற்காக விவகாரத்தை திமுக வாட்ச்சை கையில் எடுத்து இருகிறது. நான் விலை உயர்ந்த வாட்ச் அணிவதில்லை. எப்போதும் எளிமையாகவே இருப்பேன் நான்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com