முடிந்தவரை பேருந்து கட்டணம் குறைப்பு: முதலமைச்சர் பழனிசாமி
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, முடிந்தவரை பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. பேருந்து கட்டண உயர்வால் தினசரி ரூ.8 கோடி வருவாய் வந்தாலும் தினமும் ரூ.4 கோடி இழப்பு ஏற்படும். புதிய பேருந்துகளின் விலை 30% முதல் 40% வரை உயர்ந்துள்ளது. மக்கள், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, முடிந்தவரை பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. உயர்த்தப்பட்ட கட்டணம் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். பேருந்து கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. பேருந்து கட்டணத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைத்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.