கப்பலில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி: சோதனையில் சிக்கின
சென்னையிலிருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைபற்றினர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் மலேசியாவிற்கு செம்மரம் கடத்தப்பட உள்ளதாக கடந்த 10 ஆம் தேதியன்று மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. ரெடிமேட் ஆடைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த கண்டெய்னரை சோதனையிட்டதில் 8 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்திருக்கின்றன.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் போலி நிறுவனத்தின் பெயரில் அந்த கண்டெய்னர் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. செம்மரங்களை கண்டெய்னரில் அனுப்பிய நபரை பிடிக்கும் பணியில் டி.ஆர்.ஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 27 ஆம் தேதியன்று 20 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை டி.ஆர்.ஐ அதிகாரிகள் பிடித்தனர். அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை டி.ஆர்.ஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.