ரெட் அலர்ட் மக்களே... கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா?
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடுத்த இரு நாட்கள் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.