புதிய தலைமுறை செய்தி எதிரொலி: ஓமன் நாட்டில் சிக்கிய தமிழ்ப்பெண் மீட்பு
ஓமன் நாட்டில் கொத்தடிமையாக இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மரக்கடை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதியின் மகள் ராசாத்தி. இவர் எம்.காம்(M.Com) படித்துள்ளார். இவரது தந்தை ஆறுமுகம் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். ராசாத்தியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலு என்பவரை மறுமணம் செய்துகொண்டார். ராசாத்திக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், குடும்ப வறுமை காரணமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
கணினி வேலை வாங்கிதருவதாகக் கூறி அழைத்து செல்லப்பட்ட ராசாத்தி, கொத்தடிமையாக வீட்டு வேலையில் பணி அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவரது தாய் சரஸ்வதி மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இந்த செய்தியை புதிய தலைமுறை முதன்முதலில் ஒளிபரப்பியது. இதன் எதிரொலியாக தற்போது ராசாத்தி மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பட்டுள்ளார்.

