வாக்குறுதிகளை கைவிடுவதற்காக வெள்ளை அறிக்கையை உருவாக்கவில்லை: பழனிவேல் தியாகராஜன்

வாக்குறுதிகளை கைவிடுவதற்காக வெள்ளை அறிக்கையை உருவாக்கவில்லை: பழனிவேல் தியாகராஜன்

வாக்குறுதிகளை கைவிடுவதற்காக வெள்ளை அறிக்கையை உருவாக்கவில்லை: பழனிவேல் தியாகராஜன்
Published on

"திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மாற்றியமைப்பதற்கோ, கைவிடுவதற்கோ காரணமாக வெள்ளை அறிக்கையை உருவாக்கவில்லை" என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், வெள்ளை அறிக்கையின் பின்புலம் குறித்து அவர் வெளியிட்ட தகவல்:

''அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாகவும், ஆளுகையில் இருக்கும் கட்டமைப்புக் குறைபாடுகளை சரியான நேரத்தில் சரி செய்யாததாலும், மாநிலத்தின் நிதிநிலை நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. நாம் எவ்வாறு இந்த நிலையை எட்டினோம் என்பதை தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை. மாநிலத்தின்நிதி நெருக்கடியை கொரோனா பெருந்தோற்று மேலும் அதிகரித்ததுடன், அதன் மூலம் தமிழ்நாட்டின் நிதி நிலைமை எவ்வாறு பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்தியுள்ளது.

இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சீர்திருத்ததை மேலும் தாமதப்படுத்த முடியாது. வழக்கமான அணுகுமுறையைத் தொடர இயலாது. அணுகுமுறையில் அடிப்படையான மாற்றத்ததைக்கொண்டு வரவேண்டும். அப்போது தான் தொடர்ந்து அதிகரிக்கும் கடன் மற்றும் வட்டிச் செலவுகளிலிருந்து நாம் மீள முடியும்.

நமது வருவாய்ப் பற்றாக்குறையை குறைப்பதற்கு, வட்டிச்செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப கடனை கட்டுப்படுத்துவது அவசியம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும்.

எனவே, நியாயமான முறையில் வருவாயை உயர்த்த வேண்டும். இல்லையெனில், கடனளவு அதிகரித்து, வட்டிச் செலவினங்கள் வரவு செலவுத் திட்டத்தின் மீது சுமை ஏற்படுத்தும். கடந்த நான்கு ஆண்டுகளில் சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வட்டிச் செலவினங்கள் போன்ற விருப்புரிமையற்ற செலவினங்களுக்கு கூட கடன்கள் பெறப்பட்டுள்ளது. மேற்கண்ட செலவினங்கள், இதற்கு முன்பு அரசின் வருவாய் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போதிருக்கும் இந்த நடைமுறை நிறுத்த வேண்டும். நமது பொருளாதார நிலை குறித்த விரிவான ஆய்வு செய்வதற்கும், முக்கியமான தூண்டுதலாக இருக்கவும் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக சரியான ஆளுகை இல்லாததால், தற்போதைய பெரும்பாலான பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியல் உள்நோக்கத்தை தவிர்ப்பதற்காக நிதிநிலையின் சரிவிற்கான காரணங்களை நாங்கள் தெரிந்தே இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த அறிக்கையின் மூலம் மாநிலத்தில் எவ்வாறு இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டது குறித்து விவாதங்கள் எழும் என நம்புகிறோம்.

இந்த சரிவை மாற்றியமைத்து தமிழ்நாட்டை அதன் உரிய இடத்திற்கு உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தேர்தல் வாக்குறுதிகளை மாற்றியமைப்பதற்கோ, கைவிடுவதற்கோ காரணமாக இந்த அறிக்கையை உருவாக்கவில்லை'' என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com