தென்காசி: தபால் வாக்குகள் எண்ணும் பணி மீண்டும் நிறுத்தம்! தொடர் பிரச்னைக்கு என்ன காரணம்?

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.
தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கை
தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கைPT Desk

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court
Madras High CourtTwitter

அதனை தொடர்ந்து இன்று தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி காலையிலேயே தொடங்கியது. முன்னதாக தேர்தல் முடிவின்போது தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பதிவான தபால் வாக்குகள் மொத்தம் 2,589. இதில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 674 தபால் வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 1,609 பெற்றிருந்தார் எனக் கூறப்பட்டது.

இந்த தபால் வாக்குகள் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாகத்தான் அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் இந்த வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 18 பேரில் பனங்காட்டு படை கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மறு வாக்கு எண்ணிக்கை
தென்காசி மறு வாக்கு எண்ணிக்கை

மீதமுள்ள 17 வேட்பாளர்கள் நேரில் இந்த மறு தபால் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளலாம் அல்லது அவர்கள் சார்பில் ஒரு முகவர் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று பெட்டிகள் எண்ணப்பட உள்ளது. ஒரு கண்காணிப்பாளர் முன்னிலையில் ஏழு பேர் ஒரே மேஜையில் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 100 மீட்டர் முன்னதாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் காவல்துறையினர் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இவ்வளவு பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், உள்ளே ஏற்பட்ட சில பிரச்னைகளால் மறு வாக்கு எண்ணிக்கை இடையிலேயே நிறுத்தப்பட்டது. பின் பேச்சுவார்த்தை மூலம் சூழல் சரிசெய்யப்பட்டும், மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், மீண்டும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், “தபால் வாக்குகளை பொறுத்தவரை, சீலிடப்பட்ட கவரின் மேலே அட்டெஸ்டட் கொடுக்கக்கூடிய அதிகாரி காவல் ஆய்வாளராகத்தான் இருக்க வேண்டுமென சொல்கிறார்கள். துணை காவல் ஆய்வாளரென்றால், கவரை பார்த்தவுடனேயே அந்த வாக்கே செல்லாது என்கின்றனர். இதை ஏற்க முடியாது” என காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தொடர்ந்த குற்றச்சாட்டு இருந்துவருகின்றது. முன்னதாக இப்படித்தான் செய்ய வேண்டுமென அதிமுக வேட்பாளர் எதிர் கோரிக்கை விடுத்திருந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகபோக்கு எட்டப்படவில்லை என்பதால் வாக்கு எண்ணிக்கை தடைபட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்திவைப்பு - பேச்சுவார்த்தை - நிறுத்திவைப்பு என்று தொடர்வதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com