“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்” - ஆர்பி உதயகுமார் வெளியிட்ட வீடியோ
செய்தியாளர் மணிகண்டபிரபு
கடந்த சில தினங்களாக அதிமுக விவகாரங்கள்தான் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக உள்ளது.. ஓரிரு தினங்களுக்கு முன் அவினாசி அத்திகடவு திட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாததும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் விவாதத்தினைக் கிளப்பியது. நேற்று, அதிமுக உட்கட்சி விவகாரத்தினை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நேற்று மாலை செங்கோட்டையன், “கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். என்னை சோதித்துப் பார்க்காதீர்கள்” எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்துக் காப்பாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தான் சந்தித்த சோதனைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, அனைவரையும் தாயைப்போல அரவணைத்து எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால்தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்டக் காத்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியோடு அவரெடுத்த முயற்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல. இந்த இயக்கத்திற்குக் கிடைத்த இறையருள்தான் எடப்பாடியார். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு சிதறு தேங்காய்போல் சிதறிய இயக்கம், அம்மாவின் முயற்சியாலே அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. அதேபோலத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு எடப்பாடியார் சிறப்பாக இயக்கத்தை நடத்தினார். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம்; தொண்டர்கள் மனவலிமையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எதிரிகள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. மக்கள் சக்தி பெற்றிருக்கிற மகத்தான இயக்கமான அதிமுகவிற்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.