விடுதலைகோரி ரவிச்சந்திரன் மனு: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா மீது, ஆளுநர் விரைவில் முடிவெடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறியிருந்தார். 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தன்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் நளினி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, ரவிச்சந்திரன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசின் சார்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 7.5 இடஒதுக்கீட்டில் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திராமல் முடிவெடுத்தது போன்று இதிலும் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.