ஓசூர் அருகே இயங்கி வரும் நியாயவிலைக்கடையின் வாடகை பொதுமக்களிடம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாலம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நியாயவிலைக்கடை இயங்கி வருகிறது. இந்தக்கடை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவருவதால், மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆண்டுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு, உடனடியாக நியாய விலை கடையை அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும் வகையில் வழிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.