அரசு அனுமதியின்றி போலியாக கபசுரக் குடிநீர் தயாரித்தால் நடவடிக்கை:ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
அரசு அங்கீகாரமின்றி போலியாக கபசுரக் குடிநீர் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தை சுற்றி இருக்கக் கூடிய சின்மயா நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 150 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணி குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோ பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரையும் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், வெளியில் சென்று வந்த பின்னர் கிருமி நாசினியைக் கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னை நகரில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.
அரசு அங்கீகாரம் பெற்றவர்களிடம் இருந்து மட்டுமே கபசுரக் குடிநீரை பொதுமக்கள் வாங்கி பருக வேண்டும். அரசு அனுமதியின்றி கபசுரக் குடிநீர் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.