எதிர்ப்புக்கு மத்தியில் தமிழகம் வந்தது ரத யாத்திரை
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை தமிழகம் வந்தடைந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக ராமேஷ்வரத்தில் முடிவடைகிறது. இந்த ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் 10 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்ட எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு ராமராஜ்ய ரத யாத்திரை வந்தடைந்தது. இதனிடையே ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தோரை கைது செய்திருப்பது கேலிக்குரியது என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.