ரேப்பிடோ புக் செய்த இளைஞர்; அரை மணி நேரத்தில் பிரிந்த உயிர்.. நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்
சென்னையில் 22 வயது மாணவர் பாலமுருகன் ரேபிடோ பைக்கில் சென்றபோது கார் மோதியதில் உயிரிழந்தார். குரோம்பேட்டை அருகே நடந்த இந்த விபத்தில், ரேபிடோ ஓட்டுநர் பால்ராஜும் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
செய்தியாளர் : சாந்த குமார்
சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலையில் ரேபிடோ பைக்கில் சென்ற போது கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் படித்து வரும் பாலமுருகன் என்ற 22 வயது இளைஞர் ராப்பிடோ புக் செய்துள்ளார். தனது நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காக ராப்பிடோவில் சென்று கொண்டிருந்தபோது, குரோம்பேட்டை அடுத்த சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலை, டி.பி மருத்துவமனை அருகில் வேகமாக வந்த கார் ஒன்று பாலமுருகன் சென்ற பைக்கில் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ரேபிடோ இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பால்ராஜ் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வழக்கு தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கார் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.