ராணிப்பேட்டை: நடைமேடையில் இருந்து தானாக ஓடிய ரயில்; அரக்கோணத்தில் பரபரப்பு
அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடையில் இருந்த ரயில் தானாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சென்னையிலிருந்து வந்த ரயில், ஆறாவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரயில் திடீரென்று தானாக நகர்ந்து சென்றுள்ளது. இதனால் அங்கு இருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் ஓட்டுனர் ரயிலை இயக்குவதாக நினைத்தனர்.
ஆனால், மின்சார ரயில் பாதைமாறி மின் இணைப்பு இல்லாமல் பயனற்று கிடக்கும் ரயில் பாதையில் சென்றதால் ரயிலையும் உயர் மின் இணைப்பையும் இணைக்கும் கிளிப் உடைந்து பலத்த சத்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் இருந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஓட்டுனர் இல்லாமல் பின்னோக்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சுமார் சென்றிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரயில்வே உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்பு ரயிலை மீண்டும் நடைமேடைக்கு கொண்டு சென்றனர்.