தமிழக முதல்வர், துணை முதல்வர், ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது
செய்தியாளர்: லெனின்.சு
சனாதன சட்டத்தை பின்பற்றி வாழ்வதாகச் சொல்லி வரும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும், தமிழக இந்து சமய அறநிலையத் துறையையும், ஸ்ரீபெரம்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளையும் அவதூறாக பேசி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நடந்துக்கொண்டார் என பல்வேறு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனது இல்லத்தில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக “உதயநிதி, ஜீயர்கள் மூலம் தன் இல்லத்தில் ‘பிராமண தோஷம் நிவர்த்தி பரிஹாரம்’ செய்துள்ளார். அதன்மூலம் திராவிடத்தின் சனாதன எதிர்ப்பு, டெங்கு கொசு ஒழிப்பு நாடகங்கள் எல்லாம் அம்பலம் ஆகி இருக்கிறது” என பேசி அதனை சமூக வலைதளங்களில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரங்கராஜன் தன் எக்ஸ் தளத்தில், “இன்று ஒரு திருடனைப் போல, சுவரேறி குதித்து எந்தத் தகவலும் இல்லாமல் என்னைக் கைது செய்துள்ளார்கள் தமிழ்நாடு காவல்துறையினர். நான் காவல் நிலையம் செல்லும் வழியில் இருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் புகார் அளித்ததாக தெரிகிறது. நான் இப்போது சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம். கைது செய்தது, சென்னை காவல்துறையா ஸ்ரீரங்கம் காவல்துறையா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். தன் யூ-ட்யூப் பக்கத்தில் வீடியோவாகவும் இதை அவர் வெளியிட்டுள்ளார்.