சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி: குடியரசுத் தலைவர் புகழாரம்

சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி: குடியரசுத் தலைவர் புகழாரம்
சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி: குடியரசுத் தலைவர் புகழாரம்

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் மு.கருணாநிதியின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்றத்தில் திறந்து வந்தார். அப்போது பேசிய அவர், “இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் மு.கருணாநிதியின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள்” என தமிழில் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக சட்டமன்ற விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டமன்றம் மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது. தனது புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி” என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவையின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் என்பது நமது தேசிய நாட்காட்டியில் சிறந்ததொரு மாதமாகும். ஏனெனில், இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861 ஆம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தான், 1921 ஆம் ஆண்டில், சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் கீழ், அத்தகைய அமைப்பு செயல்படுவதற்கு, பல வரையறைகளும், சவால்களும் நிச்சயம் இருந்தன. சாதி, சமூகம் மற்றும் பிற அம்சங்களின் அடிப்படையில் ஏராளமான தனித்தனி தொகுதிகள் இருந்தன. ஓரளவேயாக இருந்த போதிலும், அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தை நோக்கிய நகர்வாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ஜனநாயகம், அதன் நவீன வடிவத்தில், மீண்டும் திரும்பியது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்தப் புதிய தொடக்கம் வரவேற்கப்பட்டது. விடுதலைப் போராட்ட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கனவுகளும், விருப்பங்களும் புதிய சட்டமன்றம் மூலம் வெளிப்பட முடிந்தது. மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு தளமாக, ஆரம்ப கட்டத்தில் மக்கள் வாக்குகளை வென்ற நீதிக்கட்சி இருந்தது.

மெட்ராஸ் சட்டமன்றம், ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளுமைக்கான விதைகளை விதைத்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன. ஆளுகையில் கவனம் செலுத்தி ஏழைகளை மேம்படுத்துவதற்கும், சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டு. இங்கு யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நலன் என்ற கருத்தாக்கமே இந்த சட்டமன்றத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் முற்போக்குச் சிந்தனையை எடுத்துக்காட்டுகின்ற வகையில், மிகச்சிறந்த தமிழ்க்கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம்
வானை யளப்போம், கடல் மீனை யளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்

இதை இவ்வாறு விளக்கலாம்: வேதம், அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம்; நாம் வானத்தையும், பெருங்கடல்களையும் ஆராய்வோம்; நிலவின் இயல்புகள் என்னவென்று நாம் தெரிந்து கொள்வோம்; நமது தெருக்களைத் தூய்மையாக்குவது குறித்தும் அறிந்து கொள்வோம்

திருவள்ளுவர், மகாத்மா காந்தி, சி.ராஜகோபாலாச்சாரி, சி.என்.அண்ணாதுரை, கே.காமராஜ், ஈ.வி.ராமசாமி, பி.ஆர்.அம்பேத்கர், யு.முத்துராமலிங்கத் தேவர், முஹம்மது இஸ்மாயில் சாஹிப், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பி.சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் போன்ற பல தலைவர்களின் படங்கள் இப்பேரவையில் ஏற்கனவே உள்ளன. இப்போது இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இருக்கும்.

இந்தியா, விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, ‘கலைஞர்’ தனது இளமைப் பருவத்திலேயே, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் சமீபத்தில் தான் நம்மை விட்டுப் பிரிந்தார். தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், மொழி மீது ஆர்வம் கொண்ட அரசியல் தலைவர்கள் வெகு குறைவு. அவரைப் பொறுத்தவரை, அவரது தாய் மொழி வழிபாட்டுக்குரியது. தமிழ், நிச்சயமாக, மனிதகுலத்தின் மிகச்சிறந்த, மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். உலகம் முழுமையும் அதன் வளமான பாரம்பரியத்தில் பெருமை கொள்கிறது. ஆனால், அது செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி. கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தலைவராகத் திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர்.

நிகழ்காலத்தையும், எதிர்கால முன்னேற்றத்தையும் புரிந்துகொள்ள, கடந்த காலத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுப்பிரமணிய பாரதி மற்றும் பிறரின் வாழ்க்கையில், உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களைக் காண்பீர்கள். நமது சமீபத்திய வரலாற்றில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதை நான் காண்கிறேன். தெரிந்த மற்றும் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களுடன் தொடங்கிய பணிகள் தொடரும் என்ற நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் இந்தியா தனது ஞானத்தால் உலகிற்கு வழி காட்டும். இந்த நன்னாளில் தமிழக மக்களை வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி. ஜெய் ஹிந்த்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com