சிவாஜி சிலையை எங்கு வைத்தாலும் மகிழ்ச்சி: ராம்குமார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16-வது நினைவு தினத்தை முன்னிட்டு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பலர் மெரினா கடற்கரையிலுள்ள அவரது சிலைக்கு இன்று மாலையணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேசிய தலைவர்கள், சிவாஜி சிலையை மணிமண்டபத்திற்கு மாற்றியமைக்கக் கூடாது எனக் கூறினர்.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் கூறும்போது, சிவாஜிக்கு சிலை வைக்கப்படுவதே, தமிழக அரசு அவருக்கு செய்யும் மரியாதை என்றும் சிலையை எங்கு வைத்தாலும் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்றும் கூறினார். அவருடன், சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இருந்தனர்.