”என் தம்பியே சொத்தை அபகரிக்க பார்க்கிறான்” - ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த கேர்ளின் என்பவர் அவருடைய அப்பாவுக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தில் 4 சென்டில் வீடு கட்டி வசித்து வருவதாகவும், அதனை அவருடைய தம்பி கிரிஸ்துராஜ சேவியர், அவரை அடித்து துன்புறுத்தி சொத்தை அபகரிக்க முயல்வதாகவும் குடியிருக்கும் வீட்டை இடிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டிள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மனுவை பெட்டியில் போட்டுவிட்டு தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மனு கொடுக்க வந்த பெண் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மருந்தை குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.