சிறப்பாக பணியாற்றி சர்வதேச விருது பெற்ற ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி!

சிறப்பாக பணியாற்றி சர்வதேச விருது பெற்ற ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி!
சிறப்பாக பணியாற்றி சர்வதேச விருது பெற்ற ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வனத்துறை அதிகாரி, சர்வதேச அளவிலான விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் சார் தேசிய பூங்காவில் வனச்சரக அலுவலராக பணிபுரிபவர் சதீஷ், ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்த இவர், வனவியல் பட்டப்படிப்பை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முடித்த பின்பு 2014 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பயிற்சி வனச்சரக அலுவலர் பணியில் சேர்ந்து பணியாற்றினார்.

பின்பு 2015 முதல் 2016 வரை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வனச்சரக அலுவலர் பயிற்சியை முடித்து பின்பு 2016 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவில் வனச்சரக அலுவலராக தனது பணியை துவங்கினார் சதீஷ், இவர் கடல் அட்டை கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரையும், பறவைகளை வேட்டையாடுபவர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி நடவடிக்கை எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மன்னார் வளைகுடாவை தேடி வருகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட சித்தாமைகள் இடும் முட்டைகளை சேகரித்து 95 சதவீதம் சுமார் 40 ஆமை குஞ்சுகளை கடலில்விட நடவடிக்கைகளை மேற்கொண்டார், மேலும் ராமநாதபுரம் பகுதியை ஒட்டியுள்ள சதுப்புநிலக் காடுகள் பகுதியில் 100 ஏக்கரில் புதிய மாங்குரோவ் காடுகள் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார், எனவே இவரின் செயல்களுக்காக 2019ஆம் ஆண்டு இந்தியாவில் ஆர்பி-3 எர்த் ஹீரோ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்திலிருந்து இன்டர்நேஷனல் ரேஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது, மேலும் ரூபாய் 7.25 லட்சம் பரிசுத் தொகையாக வனத்துறைக்கு, சிறப்பான சீருடை, பேட்ச் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் தெரிவித்தபோது... இந்த விருதை இந்தியாவில் உள்ள வனச்சரக அலுவலர்களுக்கும், தமிழக வனத்துறைக்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

நூறு நாடுகளுக்கு மேல், 600 விண்ணப்பங்களில், 40 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இதில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்களில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com