ராமநாதபுரம் | பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனையான ஆடுகள்
செய்தியாளர்: அ.ஆனந்தன்
தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி பக்ரீத் பண்டிகைக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று ராமநாதபுரத்தில் வார ஆட்டுச் சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டுச் சந்தையில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வழக்கத்தை விட இன்று ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது.
வழக்கமாக 15 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆடு ரூ.25 ஆயிரத்திற்கும், 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆடுகள் ரூ30 ஆயிரத்திற்கும் விற்பனையானது. திருமண காலம் என்பதாலும், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதாலும் ஆடுகளின் விலை மளமளமான உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தையில் 2 மணி நேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
தொடர்ந்து ஆட்டுச் சந்தை நடந்து வரும் நிலையில் சந்தை முடிவடையும் போது ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாக வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.