ராமநாதபுரம்: பிரியாணியில் இருந்த புழுக்களால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்கள்; அதிகாரிகள் அதிரடி சோதனை!

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் சாப்பிட்ட பிரியாணியில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
முட்டை பிரியாணி
முட்டை பிரியாணிபுதிய தலைமுறை

இராமநாதபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் வழங்கப்பட்ட பிரியாணியில் புழுக்கள் கிடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவையைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ரமேஷ் இருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித தளங்களுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி கடையில் முட்டை பிரியாணி இரண்டு பிளேட் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். அப்போது பிரியாணி உள்ளே புழுக்கள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்க, அவர்கள் மிகவும் சர்வசாதாரணமாக ’தவறு நடந்துவிட்டது’ எனச் சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளனர்.

எனினும், இந்த விஷயம் வெளியில் தெரியவர, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகுந்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயகுமார் மற்றும் லிங்கவேல் அடங்கிய அதிகாரிகள் குழு அந்த பிரியாணி கடையின் சமையலறையை சோதனை செய்ததுடன் பிரியாணி மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்தில் வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், உணவக உரிமையாளர் உடனடியாக புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

ராமநாதபுரத்தில் பிரபல உணவகத்தில் பிரியாணியில் புழு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- அ.ஆனந்தன் ராமநாதபுரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com