திடீரென உள்வாங்கிய கடல் - சுற்றுலாப் பயணிகள் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல்நீர் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு திடீரென உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ராமேஸ்வரத்தில் கடந்த 2நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஓலைக்குடா, சங்குமால், தெற்குவாடி, வடகாடு உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் கடல் சுமார் 600 மீட்டர் தூரம்வரை கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இடித்து செல்லப்பட்டன. மேலும் கடலிலிருந்து பிடித்து வரப்பட்டு விற்பனைக்காக படகில் வைக்கப்பட்டிருந்த மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட பொருட்களையும் அலைகள் இழுத்துச் சென்று விட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். நாட்டுப்படகுகள் மட்டுமின்றி, விசைப்படகுகளும், தரைத்தட்டி சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதை அடுத்து தனுஷ்கோடி கடற்பகுதியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளும் கடல் உள்வாங்கியதால், கடலில் குளிக்காமல் அச்சத்துடன் திரும்பிச்சென்றனர்.