ராமநாதபுரம்| காணாமல் போன சிறுமி.. போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்!
மதுரையைச் சேர்ந்த தம்பதியரின் ஐந்து வயது இரட்டை மகள்களில் ஒருவரான சாய் தீப்தி, ராமநாதபுரம் தாத்தா வீட்டில் விடுமுறைக்குச் சென்றபோது காணாமல் போனார். தேடுதல் நடத்திய போலீசார், பக்கத்து வீட்டுக் கிணற்றில் அவரது உடலை மீட்டனர். விசாரணையில், உறவினர் சபரிகா பொறாமை காரணமாக குழந்தையைத் தூக்கி, கிணற்றில் தள்ளிக் கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதியினருக்கு சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இருவருக்கும் 5 வயது. சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் தனது பெற்றோருடன் வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு வந்த இரட்டைக் குழந்தைகள் மற்றும் செல்வி ஆகியோர் வீட்டில் அதிகமாக புழுக்கமாக இருந்ததால் முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கியதாக சொல்லப்படுகிறது. காலையில் எழுந்து பார்த்தபோது சாய் தீப்தி காணாமல் போய் உள்ளார். இதனால் அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் சாய் தீப்தி கிடைக்காததால் ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அனைத்துப் பகுதிகளிலும் சிறுமியை தீவிரமாக தேடினர். அப்போது, பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீட்கபட்ட சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகளின் தாய் மாமா அஜித் மற்றும் அவரின் மனைவி சபரிகா(21) மற்றும் எதிர்வீட்டைச் சேர்ந்த சபரி ஆகியோரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சபரிகாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, அந்தக் குழந்தை மாற்றுத்திறனாளி என்பதாலும், விடுமுறை நாட்களில் செல்வி தனது மகள்களுடன் அவரது அம்மா வீட்டிற்கு வந்தபோது அவரது தாத்தா, பாட்டி இரட்டைக் குழந்தைகள் மீதும் அதிகம் பாசம் காட்டி வருவதுடன் குழந்தைகளுக்கு தங்க நகை, பொருளாதார உதவிகள் அதிகமாகச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சபரிகா, அந்தக் குழந்தைகள் மீது நீண்ட நாட்களாக பொறாமையில் இருந்து வந்துள்ளார்.
இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாய் தீப்தியை தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் போட்டு கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஓரிரு மாதங்களில் காதணி விழா நடத்த இருப்பதாகவும் அதற்கு தாய்மாமன் சீராக தங்க நகைகள் போட வேண்டும் என சபரிகாவின் மாமியார் கூறிவந்ததும் சபரிகாவுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. விசாரணைக்குப் பின்பு சபரிகா கைது செய்யப்பட்டுள்ளார்.

