“பசி தீர்க்கும் தருமசாலை” - வள்ளலார் பற்ற வைத்த அணையா நெருப்பு
வள்ளலாரின் 197 ஆவது பிறந்த தினம் இன்று. ராமலிங்க அடிகள் என்னும் வள்ளலாரை பற்றி சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர் ஒரு தளத்தில் மட்டும் பணியாற்றியவர் அல்ல. 1851-இல், ஒழுவில் ஒடுக்கம், 1855-இல் தொண்டைமண்டல சதகம், 1857-இல் சின்மய தீபிகை ஆகிய மூன்று நூல்களை பதிப்பித்ததோடு, 6000 பாடல்களைக் கொண்ட திருவருட்பாவையும், மனுமுறைகண்ட வாசகம் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற மூன்று நூல்களை இயற்றி வெளியிட்டு இருக்கிறார்.
சித்தமருத்துவம் தொடர்பாக ஏராளமாக எழுதியுள்ளார். சாதி, மத பேதத்திற்கு எதிராக சமூக சீர்திருத்த கருத்துக்கள் பலவற்றை வலியுறுத்தி அன்றைக்கு முற்போக்குவாதியாக இருந்தார். அதனால்தான் அவருக்கு எதிர்ப்புகளும் ஏராளமாக இருந்தன. அவரது புத்தகங்களுக்கு எதிராக எழுதப்பட்ட கண்டன புத்தகங்களே அதற்கு சாட்சி. ஆறுமுக நாவலர் தொடர்ந்த வழக்கும் எதிர்ப்பின் முக்கிய சாட்சிதான். 1865 ஆம் ஆண்டு “சுத்த சன்மார்க்க சங்கம்”, 1867இல் “சத்திய தருமச்சாலை”, 1870இல் ‘‘சித்திவளாகம்’’ மற்றும் 1872-இல் “சத்திய ஞான சபை’’ ஆகியவற்றை தோற்றுவித்தார். அதாவது அறிவார்ந்த உரையாடல்கள் நிகழ வேண்டும் என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
“எதிலும் பொது நோக்கம் வேண்டும்”, “எந்த உயிரையும் கொல்லக்கூடாது, எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக்கூடாது”, “சிறு தெய்வ வழிபாடு கூடாது, அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது”, “பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்”, “புலால் உணவு உண்ணக்கூடாது”, “கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்”, “சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது”, “மதவெறி கூடாது” ஆகிய கருத்துக்களை வள்ளலார் வலியுறுத்தி வந்தார்.
வள்ளலாரைப் பற்றி பல விஷயங்கள் இருந்தாலும் இன்றளவும் மக்கள் மனதில் நின்றுள்ளது வடலூரில் அவர் நிறுவியுள்ள தருமசாலைதான். 1867 ஆம் ஆண்டு வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று அந்தத் தருமசாலையை தொடங்கினார். இந்தத் தருமசாலைக்கு வந்தவர்களுக்கு எவ்வித பேதமும் பார்க்காமல் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. இந்தத் தருமசாலையை உருவாக்க எந்தனை தனவந்தர்களிடம் அவர் கையேந்தினார் என்பதை அவர் எழுதியுள்ள சில பாடல் வரிகள் சொல்லும். கருமி என்று தெரிந்தும் சிலரிடம் கையேந்தினேன் என்பதை அவர் குறிப்பிடும் நமக்கு அவரது கடின உழைப்பு தெரியும்.
இதனைவிட, வள்ளலாரின் இந்தத் தருமசாலையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அன்றைய தமிழகத்தின் நிலைமை புரிய வேண்டும். ஏனெனில், 1876-78 ஆண்டுகளில் தென்னிந்தியாவை பஞ்சம் ஆட்டிப் படைத்தது. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய கஜானாவை நிரப்பிக் கொள்ளும் பொருட்டே பிரிட்டீஷார் ஆட்சி செய்ததன் விளைவுதான் இந்தப் பஞ்சம். இப்பஞ்சம் ஏற்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு 1967 ஆம் ஆண்டுதான் வள்ளலார் தன்னுடைய தருமசாலையை நிறுவினர். பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அந்தத் தருமசாலை எப்படியொரு சேவையை செய்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். வள்ளலார் ஏற்றி வைத்த நெருப்பு 150 ஆண்டுகளை கடந்து இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.