'தமிழைத் தேடி பயணம்... எனக்கே வெட்கமாக உள்ளது' - பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை

'தமிழைத் தேடி பயணம்... எனக்கே வெட்கமாக உள்ளது' - பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை
'தமிழைத் தேடி பயணம்... எனக்கே வெட்கமாக உள்ளது' - பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை

“சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது” என டாக்டர் ராமதாஸ் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பொங்கு தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில் "தமிழைத் தேடி" என்கிற தலைப்பில் பரப்புரை பயணத்தை நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கினார். இதில் `பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும், பள்ளிகளில் தொடங்கி கோவில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். உலக தாய்மொழி தினமான நேற்று துவங்கி, வருகிற 28-ஆம் தேதி வரை இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அவருடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய அவர், “தமிழைத் தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம் செல்லும் எனக்கு நீங்கள் வாழ்த்து சொல்லுங்கள். உங்கள் வாழ்த்துகளோடு நான் மதுரை நோக்கி செல்கிறேன். இன்று முதல் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் அனைவரும் தமிழில் உரையாடவும். இப்போது அம்மா என்ற வார்த்தை யாரும் சொல்வது கிடையாது... மம்மி என்று சொல்கின்றனர். அம்மா என்று பசுக்கள்கூட சொல்கிறது. ஆனால் உங்கள் வீடுகளில் அம்மா என்று யாரும் கூறுவதில்லை. அம்மா என்ற வார்த்தையை மறந்து விட்டார்கள்.

நான் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் விளம்பர பலகையில் தமிழ் எழுத்து இல்லை. நாம் லண்டனில் வாழ்கிறோமா என்று கோவம் வருகிறது. ஒரு வார்த்தை... அதுவும் அரைகுறை தமிழில் பேசுகிறோம். அதுவும் கூட நெல்லை, கொங்கு தமிழாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அதுவும் இல்லை.

நான் இன்று மொழி கலந்து, 3 முறை பேசி தவறு செய்துள்ளேன். அதற்கு நானே எனக்கு ஆயிரம் ரூபாய் தண்டனை விதித்து கொண்டேன். அனைவரும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தமிழுக்காக பல போராட்டங்களை செய்து விட்டோம். நானேவும் அண்ணா சாலையில் பிறமொழி மீது கருப்பு மை பூசி போராட்டம் செய்துள்ளேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால், தமிழைக் காக்க முடியும். அரசுக்கும் அழுத்தம் கொடுத்தால் அரசும் செய்யும். சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பயணம் எனக்கே வெட்கமாக உள்ளது” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com