மாநிலங்களவை தேர்தல் | திமுக, அதிமுகவினர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல்!
கடந்த 2019 ஜூலை 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்களான வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க வைகோ, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.
இந்த 6 எம்பிகளின் பதவிக்காலம், வருகின்றன ஜூலை மாதத்தில் முடிவடையும்நிலையில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான, வேட்பு மனுதாக்கல் ஜூன் 02 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் வேட்புமனுவை திரும்பபெற ஜூன் 12ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.இதையடுத்து தி.மு.க. வேட்பாளர்கள் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுக்களை அவர்கள் தாக்கல் செய்தனர்.
மேலும், அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் அகியோரும் வேட்புமனி தாக்கல் செய்ய உள்ளனர்.