மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக சார்பில் யார் யாருக்கு வாய்ப்பு?

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக சார்பில் யார் யாருக்கு வாய்ப்பு?

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக சார்பில் யார் யாருக்கு வாய்ப்பு?
Published on

மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக, திமுகவில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களான சசிகலா புஷ்பா, செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த், டி.கே.ரங்கராஜன், முத்துக்கருப்பன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது.

பதவிக்காலம் நிறைவுபெறும் இந்த 6 பேரில் 5 பேர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவர் திமுக சார்பில் தேர்வானவர். தற்போது சட்டசபையில் திமுகவின் பலம் உயர்ந்திருக்கிறது. இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கூடுதலாக இருவர் என மொத்தம் 3 பேரை தேர்வு செய்ய முடியும்.

அதிமுகவை பொருத்தவரை 5 பேருக்கு பதிலாக 3 பேரை மட்டுமே தேர்வு செய்ய இயலும். இதனால் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் குறையும். அதேசமயம் திமுகவின் பலம் 5 ல் இருந்து 7 ஆக உயரும். இந்நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கும் என்றும் அதேபோல கட்சியில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிடிக்க அக்கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, முன்னாள் எம்பிக்கள் மைத்ரேயன், அன்வர் ராஜா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜிலா சத்யானந்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்த இடத்திற்கு முன்னாள் அமைச்சர்‌ கோகுல இந்திராவை பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com