பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை

பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை..

1991 மே 21: ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.20 மணிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார்.

1991 ஜூன் 11: இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 19 வயது பேரறிவாளனை கைது செய்தனர்.

1998 ஜனவரி 28: பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு.

1999 மே 11: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. எனினும், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல் முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2007: குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

2011 ஆகஸ்ட் 26: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் பெரும் மன உளைச்சலுக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாகவும், எனவே தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது.

2014 பிப்ரவரி 18: அவர்களின் கருணை மனுக்கள் பல ஆண்டு காலம் எந்தவித காரணமுமின்றி நிலுவையில் வைக்கப்படிருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.

2014 பிப்ரவரி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு, 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையை பெற்றது. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியது.

2014 ஏப்ரல் 25: இந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 டிசம்பர் 2: சிபிஐ விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமர்வு தீர்ப்பளித்தது.

2020, ஜனவரி 21: குற்றவாளிகள் கருணை மனு மீதான தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021 மே 28: பேரறிவாளன் பரோலில் தனது வீட்டிற்கு வந்தார். உடல்நலக்குறைவால் அவருக்கு 10 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

2022 மார்ச் 9: தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. 31 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவானனுக்கு கிடைத்த முதல் ஜாமீன் இதுவாகும்.

2022, மே 11: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு சராமாரியான கேள்விகளை எழுப்பியது. அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எப்படி அனுப்பலாம்? அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். "பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், "அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது" எனவும் வினவியிருந்தனர்.

இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

மே 18, 2022: பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com