ஜூலையில் ரஜினி தனிக்கட்சி: கொள்கையை உருவாக்குது டீம்!
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலில் நுழைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் இது தொடர்பாக அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் சத்யநாராயணா தெரிவித்தார். கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும் முதல் சுற்று ஆலோசனையை முடித்துவிட்டதாகவும் சத்யநாராயணா கூறினார்.
இயன்ற வரை அதிகம் பேரின் கருத்துகளை ரஜினி கேட்க இருப்பதாகவும் அதன் அடிப்படையில் அவரது இறுதி முடிவு இருக்கும் என்றும் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். பொது வாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே ரஜினியின் தலையாய நோக்கம் என்றும் அதற்காகவே அவர் அரசியலில் நுழைய விரும்புகிறார் என்றும் சத்யநாராயணா கூறியுள்ளார்.
ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்வது போல் தெரிவதாகவும் ஆனால் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்றும் சத்யநாராயணா கூறினார். கட்சியின் பெயர், கொள்கை உருவாக்கப்பணிகள் நடந்து வருவதாகவும் ரஜினியின் சகோதரர் கூறினார்.