தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்!
Published on

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங் கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குறித்து நேற்று திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அது இன்றும் தொடர்கிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை அழைத்ததாகத் தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பான நிலையை எட்டியது. 

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் (பிப்.24) முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரை நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இன்று சந்தித்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரித்தார் . அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் உடனிருந்தார். அதிமுக- தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com