அறவழிப்போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்: ரஜினி வேண்டுகோள்
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துகளால் எழுதக்கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும், தாய்க்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்திய இதுவரைக்கும் வரலாறு கண்டறியாத அமைதியான, ஒழுக்கமான ஓர் அமைதிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டை பெற்று வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.
மத்திய, மாநில அரசிலிருந்தும், பெரிய, பெரிய நீதியரசர்கள், வழக்கறிஞர்களிடமிருந்தும் நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பும் அதற்கு மரியாதை கொடுத்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதிகாப்பதுதான் கண்ணியமான செயலாகும்.
இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும், நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்கள் போராட்டத்துக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் அளிக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.